மாதங்கி: சமத்துவத்தை அனுபவித்தல்

Dalit History Month
2 min readAug 23, 2021

--

~ கி.மு 560–480

அனிதா தாஸ்

Translation from English to Tamil by Mathur Sathya J. You can read the original article in English here.

மாதங்கி”, ஓவியம் சந்திரக்காரி 2021

இன்று தலித் வரலாற்றில், நாம் மாதங்கு என்னும் “தீண்டத்தகாத” சாதியிலிருந்து பிக்குணியாக, அதாவது பௌத்த பெண் துறவியாகியவரின் கதையை நினைவுகூறப் போகிறோம். பௌத்த குறிப்புகளில் அவர் பிரகிருதி என்றும் சண்டாளிக்கா என்றும், மாதங்கி என்றும் அழைக்கப்படுகிறார்.

மாதங்கிக்கு முதன்முதலில் பௌத்தத்துடன் ஏற்பட்ட சந்திப்பு அவர் கிணற்றில் நீரிறைத்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்தது. மாதங்கி தன் பானைகளுடன் இருப்பதை அந்த வழியாக சென்று கொண்டிருந்த புத்தரின் நெருங்கிய சீடருள் ஒருவரான ஆனந்தா என்னும் துறவி கண்டார். தாகத்தின் காரணமாக அவளிடம் தண்ணீர் கேட்டார். மாதங்கி அதைக்கேட்டு மிகவும் பதட்டமும் பயமும் அடைந்தாள். மேல் சாதியினருடன் தண்ணீர் பகிர்ந்துகொண்ட தன் சாதி மக்குளுக்கு என்ன நடக்கும் என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள்.

“என்னால் உங்களுக்கு தண்ணீர் தரமுடியாது.. நான் ஒரு தீண்டத்தகாதவள் என்பது உங்களுக்கு தெரியவில்லையா?”

ஆனந்தா அதற்கு பொறுமையாக பதிலளித்தார்.

“நான் உனது சாதியை கேட்கவில்லை.. உன்னிடத்தில் நான் கேட்டது குடிக்க தண்ணீர் மட்டுமே”

அவர் இப்படி பதில் அளித்தது அவளுக்கு முற்றிலும் புதிதாக தோன்றியது. தன்னிடம் ஒருவர் தண்ணீர் வாங்கி பருகுவதை மிக சாதாரணமாக எண்ணுகிறார் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. சமூகம் உருவாக்கிவைத்திருந்த வரையறையும் அதில் அவளது இடமும் அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. காலத்துக்கும், அடிப்படை மனிதமே மறுக்கப்பட்ட மாதங்கு பெண் அவள். அப்படியிருக்கையில் ஏன் இந்த முன்பின்னரியாத நபர் அந்த சடங்கு வரையறைகளை மீறுகிறார் என்று வியந்தாள்.

அவள் தன் ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியாமல் அனந்தாவிடம் — அவர் எங்கிருந்து வருகிறார்? எதற்காக இங்கு வந்திருக்கிறார்? ஒரு தீண்டத்தகாதவர் கையில் நீர் வாங்கி அருந்த அனுமதிக்கும் அவரது மார்க்கம் தான் என்ன? — என்று நூறு கேள்விகளை கேட்டு தள்ளிவிட்டாள். இப்படி தான் இதுவரை உணர்ந்திடாத மனிதமும், சமத்துவமும் தனக்கு அளிக்கப்படுவது அவளை ஆழமாக பாதித்தது, அது அவளை அனந்தாவின் மீது காதல் கொள்ளவைத்ததது. அவரோ தான் முழுமையாக துறவறம் ஏற்றவர் என்பதால், அவளை புத்தரிடம் அழைத்து சென்றார்.

புத்தருடன் சிறிது காலம் தங்கி பௌத்தம் கற்றவுடன், அனந்தாவின் மீது ஏற்பட்ட காதல் தன் இருப்பிலே உள்ளடங்கிய நியாயத்தின் மீதுள்ள ஒரு ஆழமான காதலின் பிரதிபலிப்பு தான் என்பதை உணர்ந்தாள். இதை தொடர்ந்து புத்தரிடம் தன்னை அவரது சங்கத்தில் பெண் துறவியாக ஏற்றுக்கொள்ளுமாறு முறையிட்டாள். புத்தரும் அவளை தனது சங்கத்தில் ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில்தான் மாதங்கி புத்தரின் சங்கத்தில் இணைந்த பிக்குணிகளின் முன்னோடிகளில் ஒருவராகிறார்.சங்கத்துக்குள் அவரின் நுழைவு ஒரு முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியது. முன்னாள் பிராமண அரசராக இருந்த பிரசஞ்சித்தும், சங்கத்தில் இருந்த முன்னாள் சத்திரியர்களும் ஒரு போராட்டத்தை நடத்தினர்.

“மகாபிரபுவே, ஒரு பிராமணரும் சண்டாளனும் ஒன்றாக வழிபடவே முடியாது! அவரிருவரும் ஓரிடத்திலே இருக்க முடியாது!” என்று புத்தரை அவரது செயலுக்காக கண்டித்தனர்.

ஆனால் புத்தரோ “ஒரு பிராமணர் உலர்ந்த மரத்துண்டுகளின் உராய்வில் பிறக்கவில்லை; வானத்திலிருந்து இறங்கியோ காற்றிலிருந்து தோன்றியோ பூமியை பிழிந்தெழுந்தோ பிறக்கவில்லை. ஒரு சண்டாளரை போலவே அவரும் ஒரு வயிற்றில் தான் கருவுருகிறார். மனிதர்களின் மத்தியில் சமமின்மையை அனுமானிப்பது இயற்கைக்கே முரணானது. அவர் (மாதங்கி) இங்கு தங்குவார், சங்கத்துக்கு பணிசெய்வார்” என்று பதிலளித்தார்.

மாதங்கியின் கதை, தீண்டத்தகாத என்று கருதப்பட்ட பெண்களின் வலிமைக்கு முன்னோடியான எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, பௌத்தம் போன்ற புரட்சிகரமான மார்க்கங்கள் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் சாத்தியங்களையும் விளக்குகிறது.

அனிதா தாஸ்,பெண்கள் மற்றும் பௌத்தத்தின் விடுதலை பாரம்பரியங்கள் தொடர்பானவை பற்றி ஆய்வுசெய்யும் சுதந்திர அறிஞர்.

--

--

Dalit History Month
Dalit History Month

Written by Dalit History Month

Redefining the History of the Subcontinent through a Dalit lens. Participatory Community History Project

No responses yet